கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 January, 2014

கோலி சோடா சினிமா விமர்சனம் / Goli Soda Movie Review



இந்த உலகம் மனிதனை இரத்தம், சதை, இதயம், மனசாட்சி உள்ள ஒரு உயிராகப் பார்ப்பதில்லை. அதற்கு மாறாக ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அந்த அடையாளங்கள்தான் அவனுக்கு மகுடங்கள்.. அந்த அடையாளங்கள் அவனுக்கு முகவரி... அந்த அடையாளங்கள் அவனுக்கு எல்லாமாகவும் இருந்துவிடுகிறது. இங்கு ஆடைகள் இன்றி கூட வாழ்ந்துவிடலாம் ஆனால் அடையாளங்கள் இன்றி வாழ்வது கடினம்...

நாம் மறைந்தப்பிறகும், நம்மை இந்த உலகம் மண்ணோடு மண்ணாக்கிவிட்டப்பிறகும், நம் அடையாளங்கள் மட்டும் இந்த‌ உலகைவிட்டுப் பிரிவதில்லை... உலகச்சரித்திரங்கள் இந்த அடையாளங்களைத்தான் வரலாறு என்று இதுவரை பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது...

கலிங்கப்போர் என்ற அடையாளம்தான் அசோகரை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது... உலகை வெல்லும் ஆசை என்ற அடையாளம் தான் மாவீரன் அலேக்சாண்டரை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது... சேகுவேர-வின் வீரமும், விவேகானந்தனின் பக்தியும், பெரியாரின் பகுத்தறிவும் இதுபோன்ற அடையாளங்களே... இப்படியாய் அடையாளங்கள் இல்லாதவர்களே தன் புகைப்படங்களை ஒட்டி எதையெதையோ காட்டிக்கொண்டிருக்கிறார்கள்...

அட என்ன... படத்தின் விமர்சனத்தை விட்டுவிடடு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார் என்ற கோவம் வேண்டாம்... படத்தின் சிறுதாக்கமே இந்த முன்னுரை....

தனக்கென எந்த அடையாளமும் இல்லாது... ஆசியாவின் மிகப்பெரிய காய்கனி அங்காடியான கோயம்பேடு மார்‌கெட்டில் மூட்டை தூக்கிபிழைக்கும் நான்கு சிறுவர்கள்.. தனக்கென ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தையும், அந்த அடையாளம் அழிக்கப்படும்போது கோவப்பட்டு எழுவதையும் தன்னுடைய பாணியில் விஜய்மில்டன் எளிமையாக சொல்லியிருக்கும் படம்தான் கோலிசோடா...

‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, யாமினி ஆகியோரே இந்தபடத்தில் நடித்திருக்கிறார்கள்....

கோயம்பேடு மார்கெட்டில் இரவு முழுவதும் மூட்டை தூக்கிபிழைத்து கொண்டு... தனக்கென்று எதுவும் இல்லாது.. தன்னுடைய பெயர்கூட என்னவென்று தெரியாத இந்த நான்கு சிறுவர்களும் (சிறுவர்களும் அல்ல பெரியவர்களும் அல்ல) எப்படியாவது.. நமக்கும் ஏதாவது அடையாளம் வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்...


இந்த மார்கெட்டிலே ஏதாவது செய்து தன்னுடைய சொந்தகாலில் நிற்க நினைக்கும் இவர்களை.. மார்க்கெட்டில் காய்கறி ஏஜென்டாக இருக்கும் ஆச்சி இவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்... (ஆச்சியாக பசங்க படத்தில் கிஷோருக்கு அம்மாவாக நடித்தவர்)... மேலும் மார்க்கெட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி நாயுடை (வில்லன்) பார்த்து உதவிகேட்கிறார்கள்...

அவரும்‌ தன்னுடைய பயன்படாத குடோனை கொடுத்து உதவுகிறார்... என்ன தொழில் செய்வது என்று யோசித்து பின் ”ஆச்சி மெஸ்” என்ற உணவகத்தை திறக்கிறார்கள்.... நன்றாக செயல்பட்டு “ஆச்சி மெஸ்” என்ற அடையாளத்தை பெறுகிறார்கள்...

இதற்கிடையில் ரவுடி நாயுடுவின் ஆட்கள் ஹோட்டலில் தண்ணியடிப்பது, தவறான செய்கைகள் செய்வது என தொடர... அதை இந்த பசங்க கேட்க இருவர்களுக்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது....

தெருவில் அவமானப்பட்ட ரவுடிகள் தன்னுடைய ரவுடி என்ற அடையாளத்தை காட்ட  இழந்த மானத்தை காப்பாற்ற அதே இடத்தில் அவர்களை அழித்து மக்களுக்கு தம்மீது உள்ள பயத்தை தக்கவைக்க நினைக்கிறார்கள்...

இந்த பசங்களும் எப்படியாவது தன்னுடைய ஆச்சி மெஸ் என்ற அடையாளத்தை விட்டுவிடக்கூடாது என்று அந்த ரவுடிகளுடன் போராடுகிறார்கள்... ஒரு கட்டத்தில் நான்குபேரையும் அ‌டித்து உதைத்து திரும்பி வராதமாதிரி இந்தியாவின் நான்கு மூளைகளில் விட்டுவிடுகிறார்கள்...

நம்முடைய அடையாளம் போய்விட்டதே என்று குமுரும் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தம்முடைய அடையாளம் எங்கு பறிபோனதோ மீண்டும் அங்கேதான் அதை பெற வேண்டும் என்று மீண்டும் கோயம்பேடு ஆச்சி மெஸ் வருகிறார்கள்...

ரவுடிகளுடன் சண்டையிட்டு அந்த இடத்தை பிடித்தார்களா... தன்னுடைய அடையாளத்தை பெற இவர்கள் என்ன செய்கிறார்கள்... அவமானம் பட்ட ரவுடி கும்பல் ரவுடிஸம் என்ற தன்னுடைய அடையாளத்தை பெற என்ன வில்லத்தனம் செய்கிறார்கள்.. இறுதியில் யார் யார் தன்னுடைய அடையாளங்களை தக்க வைத்துக்கொண்டார்கள் என்று நல்லதொரு கிளைமேக்ஸில் சொல்லி கைதட்டலோடு முடித்திருக்கிறார் விஜய் மில்டன்....

பசங்க படத்தில் நடித்த அந்த நான்குபேரும் கதைக்கு எற்றார்போல் பொருந்தியிருக்கிறார்கள்... முதல்பாதியில் காதல், கலாட்டா, என துருதுருவென்று குறும்போடு திரியும் இவர்கள்... பிற்பாதியில் ரவுடிகளோடு போராட்டம் என ஒவ்வொறு காட்சிகள் நெகிழவைக்கிறது...


இந்த நால்வரோடு நம்ம அண்ணாச்சி இமான் நடித்திருக்கிறார்... நகைச்சுகைக்கும் பையன்களோடு செய்யும் சேட்டைக்கும் சபாஷ்பெறுகிறார்..

படம் முழுக்க முழுக்க கோயம்பேடு மார்கெட்டில் படமாக்கியிருக்கிறார்கள்... கேமராவை மறைத்துவைத்து யதார்த்தமாக எடுத்ததாக சில தகவல்கள் வந்தது.. உண்மையில் அப்படித்தான் சில காட்சிகள் எடுத்திருக்கிறார்கள்... பாராட்டலாம்...

பாடல்கள் என்று தனியாக மொக்கை போடாமல் கதையோடு கலந்து ஒருசில கானாக்கள் வருகிறது.... ஒரு பாடலுக்கு நம்ம பவர்ஸ்டாரையும், சாம் ஆண்டர்சனையும் ஆடவைத்திருப்பது சூப்பர்...

சில படங்களை ஒளிப்பதிவு செய்ததின் மூலம் தனித்துவிளங்கிய விஜய்மில்டன் இந்தபடத்தின் மூலம் இயக்கத்திலும் வித்தியாச இயக்குனர் வ‌ரிசையில் இடம்பிடிப்பார் என்று நம்புகிறேன்...

செண்டிமெனட் வசனங்கள், (சில வசனங்கள் உண்மையில் கைதட்டவைக்கிறது.. கண்ணீரை வரவைக்கிறது) யதார்த்தமான சண்டைக்காட்சிகள், பசங்க செய்யும் குறும்புள், கூடசேரும் இரண்டு பள்ளி மாணவிகள்... பசங்களுக்கு பரிதாபப்பட்டு உதவும் போலீஸ் என படம்முழுக்க ரசிக்கும்படி இருக்கிறது...

கோடிகோடியாய் கொட்டி படம் எடுத்து... அதை நல்லப்படம் என்று மக்களை நம்பவைத்து.. தேவையில்லாத விளம்பரங்களை தேடி அப்படியும் ஊத்திக்கொண்டுப்போதும் படங்களுக்கு மத்தியில்.. குறைந்த முதலீட்டில் எளிமையான கதையின் மூலம் ஜெயித்துவிட்டது இந்த கோலி சோடா.

எல்லாருக்கும் இங்கு அடையாளங்கள் இருக்கிறது. அந்த அடையாளங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்குள் இருந்து ஒரு எழுச்சி பொங்கிவரும் அப்படி பொங்கி வந்தால் என்னாவாகும் என்று... கோலி சோடாவை மேற்கோள்காட்டி 2 மணிநேர கதையில் சொல்லியிருக்கிறார்கள்....

3 comments:

  1. பரவாயில்லையே..அதற்குள் விமர்சனமா......இன்று போகலாம்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  2. நல்ல கதையாக இருக்கிறது

    படம் ஓடிவிடும் என்று நினைக்கிறன்...
    http://www.malartharu.org/

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...